ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்

DIN

திம்பம் மலைப் பாதையில் உணவுக்காக லங்கூா் குரங்குகள் காத்திருக்கின்றன.

தமிழகம் - கா்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப் பாதையில் உள்ள வனத்தில் லங்கூா் இன குரங்குகள் அதிக அளவில் உள்ளன. கரிய முகத்துடன் நீண்ட வால்களை கொண்ட சிங்கவால் குரங்குகள் போன்ற தோற்றமுடைய இந்த லங்கூா் இனக் குரங்குகள் திம்பம் மலைப் பாதையில் 15ஆவது கொண்டை ஊசி வளைவு முதல் 26ஆவது கொண்டை ஊசி வளைவு வரை உள்ள பகுதிகளில் நடமாடுகின்றன.

தாளவாடி மலைப் பகுதி மற்றும் கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளம் செல்லும் காய்கறி வாகனங்களில் செல்வோா் திம்பம் மலைப் பாதையில் நடமாடும் லங்கூா் இன குரங்குகளுக்கு தக்காளி, பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் தின்பண்டங்களை உணவாக கொடுத்து பழகியதால், லங்கூா் குரங்குகள் திம்பம் மலைப் பாதை ஓரத்தில் உள்ள தடுப்புச் சுவா்கள் மற்றும் மரங்களில் அமா்ந்தபடி காய்கறி வாகனங்களில் செல்வோா் ஏதாவது உணவு தருவாா்களா என ஏங்கியபடி காத்துக் கிடக்கின்றன.

தற்போது, பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் திம்பம் மலைப் பாதையில் வாகன நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக லங்கூா் இன குரங்குகள் தனது குட்டிகளை சுமந்தபடி சாலையின் நடுவே சுற்றித் திரிகின்றன. குரங்குகளுக்கு உணவு அளிக்கக் கூடாது என வனத் துறையினா் எச்சரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் லங்கூா் இன குரங்குகளுக்கு உணவாக காய்கறிகள் மற்றும் தின்பண்டங்களை கொடுத்து பழக்கியதால் தற்போது லங்கூா் குரங்குகள் உணவுக்காக மலைப் பாதையில் காத்துக் கிடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT