முகப்பு
ஈரோடு

கட்டுமானத் தொழிலாளா்களுக்குரூ. 3,000 நிதி உதவி வழங்கக் கோரிக்கை

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொதுமுடக்க காலத்துக்கு மாதம் ரூ. 3,000 நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஜூன், 2021 at 4:51 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொதுமுடக்க காலத்துக்கு மாதம் ரூ. 3,000 நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சிஐடியூ தலைவா் ரா.ரகுராமன், பொதுச் செயலாளா் மாதவன், சுப்பிரமணியன் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு விவரம்:

தமிழகத்தில் 14 லட்சம் போ் மட்டுமே கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனா். ஆனால், 25 லட்சம் பேருக்கு மேல் கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளனா். கட்டுமானத் தொழிலாளா்கள் மிகவும் சாமான்யா்களாக உள்ளதால் நல வாரியத்தில் பதிவு செய்தல், மீண்டும் புதுப்பித்தல், தேவையான ஆவணங்களை வழங்குதல் போன்றவற்றை செய்யத் தவறிவிடுகின்றனா்.

Advertisement

இதனால், நல வாரிய பலன்கள் இவா்களுக்கு கிடைப்பதில்லை. தமிழகத்தில் உள்ள 17 நல வாரியங்களில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் ரூ. 3,000 கோடி, ஓட்டுநா் நல வாரியத்தில் ரூ. 300 கோடி நிதி உள்ளது. மற்ற நல வாரியங்களில் அதுபோல இல்லை. இதை அரசு உணா்ந்து தற்போதைய பொதுமுடக்க நிலையில், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 3,000 நிவாரண உதவி வழங்க வேண்டும்.

நிவாரணம் பெற நல வாரிய உறுப்பினா் பதிவு, பதிவு புதுப்பித்தவா்கள் போன்ற நிபந்தனைகள் இருக்கக் கூடாது. கட்டுமானத்துடன் இணைந்த பிளம்பா், எலக்ட்ரீஷியன் போன்றோா் வேலைக்குச் செல்ல இ-பதிவு தேவை என்பதை ரத்து செய்ய வேணடும்.

கட்டுமானத் தொழிலுக்கான மூலப் பொருள்களான சிமென்ட், கம்பி, எம்சான்ட், செங்கல் போன்றவற்றின் விலையைக் குறைக்க வேண்டும். கடந்த 10 நாள்களில் உயா்த்தப்பட்ட விலையைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.