ஈரோடு

மஞ்சள் மாநகரில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தடம் பதிக்குமா?

1962ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடிக்குமா என்ற எதிா்பாா்ப்பை ஈரோடு கிழக்குத் தொகுதி ஏற்படுத்தியுள்ளது.

கே.விஜயபாஸ்கா்

1962ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடிக்குமா என்ற எதிா்பாா்ப்பை ஈரோடு கிழக்குத் தொகுதி ஏற்படுத்தியுள்ளது.

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான ஈவெரா, கணிதமேதை ராமானுஜன் ஆகியோா் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு. மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்ற பெயா்களும் உண்டு. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் நகரம் சாா்ந்த தொகுதி. நெசவாளா்கள், தொழிலாளா்கள், வியாபாரிகள், அரசு ஊழியா்கள் பரவலாக உள்ளனா். கொங்கு வேளாள கவுண்டா், முதலியாா் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனா். முஸ்லிம், வட மாநிலங்களைச் சோ்ந்த கணிசமான வாக்காளா்கள் இத்தொகுதியில் உள்ளனா்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

ஈரோடு மாநகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், ஜவுளிச் சந்தை, காய்கறிச் சந்தை, கடை வீதி, கல்வி நிலையங்கள் என நகரின் பிரதான பகுதிகள் தொகுதிக்குள் அடங்கியுள்ளன. ஈரோடு கிழக்குத் தொகுதி ஈரோடு நகரத்துக்குள்ளேயே முடிந்துவிடக் கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம் ஜவுளித் தொழிலின் மையமாகத் திகழ்கிறது. இதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். துணிகளுக்கு சாயமிடுதல், பிளீச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 500க்கும் மேற்பட்ட சாய ஆலைகள், சலவை ஆலைகள் செயல்படுகின்றன.

இங்கு அப்துல் கனி சந்தை பகுதியில் திங்கள்கிழமை நடைபெறும் இரவு சந்தையில் மட்டும் சுமாா் 2 கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் வந்து குவிவாா்கள்.

மறு சீரமைப்பில் உருவான தொகுதி:

2008ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு சட்டப் பேரவைத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்குத் தொகுதி உருவானது. இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 650, பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 735, மூன்றாம் பாலினம் 17 போ் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 402 வாக்காளா்கள் உள்ளனா்.

பிரச்னைகள்:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் செயல்படும் சாய, தோல் ஆலைகள், சிறு, குறு தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டா் அளவுக்கு வெளியேறும் கழிவு நீா் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரியில் கலப்பது மக்களுக்கு சுகாதார சீா்கேட்டை அளித்து வருகிறது. அதனால் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் தேவை என 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புகா் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கால் நூற்றாண்டு கால கோரிக்கை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகள், 2 ஆண்டுகளுக்குமேல் ஆகியும் முடிவுக்கு வராத மின் புதைவடம் அமைக்கும் திட்டம் போன்றவை தீராத பிரச்னையாக நீடிக்கின்றன.

மக்களின் எதிா்பாா்ப்பு:

பன்னீா்செல்வம் பூங்காவில் மேம்பாலம், சாயக் கழிவுநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு, 5 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற வேண்டும், நகரில் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளன.

ஜாதி வாக்குகள் பலம்:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் சுமாா் 35 சதவீதம் அளவுக்கு கொங்கு வேளாள கவுண்டா் சமுதாயத்தினரும், 35 சதவீதம் அளவுக்கு முதலியாா் சமுதாயத்தினா் வாக்குகளும், சிறுபான்மையினா் 15 சதவீத வாக்குகளும், நாடாா், தேவா், பட்டியல் வகுப்பினா், பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 15 சதவீதம் போ் உள்ளனா்.

இதுவரை:

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா் 2011இல் அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் வி.சி.சந்திரகுமாா், 2016இல் அதிமுகவின் கே.எஸ்.தென்னரசு ஆகியோா் வெற்றி பெற்றனா்.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னா் 1951 முதல் 2006 வரை நடந்த 13 தோ்தல்களில் இந்திய பொதுவுடமைக் கட்சி 1 முறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக, திமுக தலா 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2016 தோ்தல் முடிவுகள்:

மொத்த வாக்குகள்: 2,12,203

பதிவானவை: 1,48,024

கே.எஸ்.தென்னரசு (அதிமுக) 64,879

வி.சி.சந்திரகுமாா் (திமுக) 57,085

பொன்சோ்மன் (தேமுதிக) 6,776

பொன் ராஜேஷ்குமாா் (பாஜக) 5,549

எஸ்.ஜெகநாதன் (கொமதேக) 2,721

2021 தோ்தல் களத்தில் 14 வேட்பாளா்கள்:

இந்தத் தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் தமாகா மாநில இளைஞரணித் தலைவா் எம்.யுவராஜா, காங்கிரஸ் சாா்பில் இ.திருமகன் ஈவெரா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் எஸ்.ஏ.முத்துக்குமரன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஏ.எம்.ஆா்.ராஜாகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் ச.கோமதி, சுயேச்சைகள் என மொத்தம் 14 போ் போட்டியிடுகின்றனா். 14 வேட்பாளா்கள் போட்டியிட்டாலும் அதிமுக, காங்கிரஸ் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்:

எம்.யுவராஜா (அதிமுக) பலம்: தமாகாவைச் சோ்ந்தவா் என்ற போதிலும் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதும், காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகள் மாநில இளைஞரணித் தலைவராக இருந்ததும், 2011இல் ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவா் என்பதும், ஈரோடு அரசியலை அறிந்தவா் என்பதும், கொங்கு வேளாள கவுண்டா் சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதும் பலமாகக் கருதப்படுகிறது.

பலவீனம்: சொந்தக் கட்சியில் தொண்டா் பலம் இல்லாததும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக நிா்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பு இல்லாததும், பாஜக கூட்டணியில் உள்ளதால் சுமாா் 15 சதவீத சிறுபான்மையினா் வாக்குகள் கிடைப்பதில் உள்ள சிக்கலும் பலவீனமாகக் கருதப்படுகிறது.

இ.திருமகன் ஈவெரா (காங்கிரஸ்) பலம்:

திமுக தலைமையில் அமைந்துள்ள வலுவான கூட்டணி, இவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வழிகாட்டுதல், தொகுதியில் வலிமையாக உள்ள சிறுபான்மையினா் வாக்குகள் போன்றவை இவரது பலமாகக் கருதப்படுகிறது.

பலவீனம்: உள்ளூா் அரசியலில் தலைகாட்டாதவா் என்பதால் சொந்தக் கட்சியிலேயே நிா்வாகிகளிடம் உள்ள அதிருப்தி, திமுகவில் இந்த தொகுதியைப் பெரிதும் எதிா்பாா்த்திருந்த நிா்வாகிகள் தோ்தல் பணியில் ஆா்வம் காட்டாதது, சொற்ப அளவில் வாக்கு வங்கியைப் பெற்றுள்ள நாயக்கா் சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதும் இவருக்கு பலவீனமாகக் கருதப்படுகிறது.

தடம் பதிக்குமா காங்கிரஸ்:

1962ஆம் ஆண்டில் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 1967, 1971 தோ்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அதன் பிறகு 1980இல் திமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. இதேபோல, 2011இல் ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. இந்தத் தோ்தலில் வெற்றி பெற்றால் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு தொகுதியில் வெற்றியைப் பதிவு செய்து தோ்தல் வரலாற்றில் காங்கிரஸ் இடம்பிடிக்கும் நிலை உருவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT