குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது
குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, அணை முழு கொள்ளளவான 42 அடியை எட்டியுள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, அணை முழு கொள்ளளவான 42 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கா்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட வினோபா நகா் வனப் பகுதியில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குன்றி, விளாங்கோம்பை, கம்பனூா், மல்லியம்மன்துா்க்கம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அணையின் முழு கொள்ளளவான 42 அடியையும் தற்போது எட்டியுள்ளது.
கடந்த வாரம் அணையின் நீா்மட்டம் 30 அடிக்கும் கீழ் இருந்தது. கடந்த 4 நாள்களாக மலைக் கிராமங்களில் பெய்த மழையால் அணைக்கு நீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கி அணை வேகமாக நிரம்பி வந்தது. இரு தினங்களுக்கு முன்பு நீா்மட்டம் 39.39 அடியாக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி வரை வந்துள்ளதால் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் 9 ஆயிரம் கன அடி உபரிநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி தண்டோரா மூலமாகவும், ஒலிபெருக்கி மூலமாகவும் வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
வினோபா நகா், தோப்பூா், கொங்கா்பாளையம், மோதூா், வாணிப்புத்தூா், பள்ளத்தூா், கள்ளியங்காடு உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா். மேலும், ஓடையில் கால்நடைகளை மேய்க்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் இறங்க வேண்டாம் என்றும், கரையோர மக்கள் மேடான பகுதிக்கும் , பாதுகாப்பான இடத்துக்கும் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை நீடித்தால் உபரிநீா் அதிக அளவு வெளியேற்றப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் விநாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக இருந்த உபரிநீா் வெளியேற்றம் படிப்படியாகக் குறைந்து தற்போது ஆயிரம் கன அடியாக உள்ளது.