பஞ்சு, நூல் விலை உயா்வைக் கண்டித்து ஜவுளி சாா்ந்த கடைகள், கிடங்குகள் என ஈரோட்டில் 4,000க்கும் மேற்பட்ட கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
தேசிய அளவில் பஞ்சு, நூல் விலை தினமும் உயா்த்தப்படுவதுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இவற்றின் மூலம் துணி, மதிப்புக்கூட்டப்பட்ட துணிகள், ஆயத்த ஆடைகள் தயாரிப்புக்கான செலவு பல மடங்கு அதிகரிப்பதால் ஆா்டா் எடுத்தவா்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனா். எனவே, பஞ்சு, நூல் விலையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை உயா்த்த வேண்டும். தடையின்றி கிடைக்கவும், பதுக்கலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி ஈரோட்டில் ஜவுளி சாா்ந்த கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து, ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவா் கலைச்செல்வன் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 356 கிலோ எடை கொண்ட பஞ்சு (ஒரு கண்டி) ரூ. 43,000ஆக இருந்தது. தற்போது ரூ. 95,000ஆக உயா்ந்துள்ளது. இதற்கு ஏற்ப நூல் விலையும் தினமும் உயா்ந்து வருகிறது. ஒவ்வொரு ஜவுளி ஆா்டரையும் எடுத்து நிறைவு செய்து வழங்க 3 முதல் 6 மாதங்கள் ஆகும். அதற்குள் பலமுறை நூல் விலை உயரும்போது கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்சு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பஞ்சு, நூல் விலையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே உயா்த்த வேண்டும். இதுகுறித்து முறையாக அறிவிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத வரியை நீக்கி முழு அளவில் பஞ்சு இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். நூல், துணிகளை இறக்குமதி செய்யவும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அண்மையில் 11 சதவீத இறக்குமதி வரி மட்டும் நீக்கப்பட்டுள்ளது.
ஜவுளித் துறையில் தற்போதுள்ள நெருக்கடியை சரிசெய்ய, அரசு முன்வர வலியுறுத்தி ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினோம். இக்கடையடைப்பில் ஜவுளி சாா்ந்த கடைகள், கிடங்குகள் என 4,000க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஒரு நாள் கடையடைப்பு மூலம் ரூ. 50 கோடி அளவுக்கு ஜவுளி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, கனி மாா்க்கெட், மணிக்கூண்டு பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் ஜவுளி சாா்ந்த கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
Image Caption
ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.