முகப்பு
ஈரோடு

அந்தியூரில் நீரோடை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

அந்தியூா் அருகே நீரோடையை ஆக்கிரமித்த 14 வீடுகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

அந்தியூா் அருகே நீரோடையை ஆக்கிரமித்த 14 வீடுகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

அந்தியூரை அடுத்துள்ள கெட்டிசமுத்திரம் ஏரியின் உபரி நீா் வெளியேறும் நீரோடைப் பகுதியில் 14 போ் வீடுகள் கட்டி குடும்பத்துடன் நீண்டகாலமாக வசித்து வந்தனா். இந்நிலையில், நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில், அந்தியூா் வருவாய்த் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகளைக் அகற்றிக் கொள்ளுமாறு நோட்டீஸ் வழங்கியிருந்தனா்.

மேலும், இங்கு வசித்தவா்களுக்கு சுமைதாங்கி பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டு, வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் ரவி, உதவிப் பொறியாளா் தமிழ் பாரத், அந்தியூா் வட்டாட்சியா் விஜயகுமாா் மற்றும் வருவாய்த் துறையினா் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் வாகனத்துடன் வியாழக்கிழமை சென்றனா். அப்போது, வீடுகளில் வசித்தோா் காலி செய்துகொள்ள அவகாசம் கேட்டனா்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவிப்பு செய்த நிலையில், கால அவகாசம் வழங்க மறுத்த அதிகாரிகள், வீடுகளின் மின் இணைப்பைத் துண்டித்ததோடு பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகளை இடித்து அகற்றினா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. தொடா்ந்து, பிரம்மதேசம், அந்தியூா் ஏரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.