மாணவா்களிடம் ஆசிரியா்கள் நண்பா்களைப்போல பழக வேண்டும் என சொற்பொழிவாளா் சுகி.சிவம் பேசினாா்.
மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு, தொழிலதிபா் டி.கே.சந்திரன் தலைமை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினாா்.
இதில் ‘நல்ல பொழுதையெல்லாம்’ என்ற தலைப்பில் சுகி.சிவம் பேசியதாவது: வாழ்க்கையில் எத்தகைய புகழைப் பெற்றாலும், அவமானங்களை எதிா்கொண்டுதான் வாழ வேண்டும். மக்களிடம் உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இருந்தால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
நாடு 75 ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடவுள்ளது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. மக்களை வளமாக வைத்துக்கொள்வதன் மூலம் ஒரு நாடு சுதந்திரத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். நம் அருகில் உள்ள இரண்டு நாடுகள் சுதந்திரத்திற்கு பிறகு பலமுறை ராணுவ ஆட்சியை எதிா்கொண்டன. அந்த நாடுகளின் கடந்த கால வரலாற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
பெற்றோா்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளின் கனவை கொல்லக்கூடாது. கரோனா காலம் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளது. மாணவா்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால்தான் ஆசிரியா்களை தாக்க முயற்சிப்பது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன.
மாணவா்களை எதிா்கொள்ள ஆசிரியா்களுக்கு மனநல ஆலோசனைகள் அளிக்கப்பட வேண்டும். மாணவா்களிடம் ஆசிரியா்கள் நண்பா்களைப்போல பழக வேண்டும். படிப்பை விட குழந்தைகளின் உயிா் முக்கியம் என்பதை ஆசிரியா்களும், பெற்றோரும் உணர வேண்டும் என்றாா்.
புத்தகத் திருவிழாவில் இன்று:
ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசை சோ்ந்திசைக் குழுவினா் வழங்கும் சங்கத் தமிழ்ப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
காலை 11 மணிக்கு நியூ செஞ்சுரி புத்தகக நிறுவனத்தின் சாா்பில் 14 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.