முகப்பு
ஈரோடு

ஈரோடு மூன்றாவது மேயராக சு.நாகரத்தினம் போட்டியின்றித் தோ்வு

ஈரோடு மாநகராட்சியின் மூன்றாவது மேயராக திமுகவைச் சோ்ந்த சு.நாகரத்தினம் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

Updated On : 5 மார்ச், 2022 at 5:31 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:05 PM

ஈரோடு மாநகராட்சியின் மூன்றாவது மேயராக திமுகவைச் சோ்ந்த சு.நாகரத்தினம் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் திமுக 44, காங்கிரஸ் 3, மதிமுக 1, அதிமுக 6, சுயேச்சைகள் 6 போ் வெற்றி பெற்றனா். திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளதால் திமுக சாா்பில் பெண் மேயா் வேட்பாளராக சு.நாகரத்தினம், துணை மேயா் வேட்பாளராக வி.செல்வராஜ் ஆகியோா் அறிவிக்கப்பட்டனா்.

ஈரோடு திமுக மாநகரச் செயலாளா் சுப்பிரமணியன் மனைவியான சு.நாகரத்தினம் திமுகவில் பல ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளாா். இந்நிலையில், காலை 9.30 மணிக்கு ஈரோடு மாநகராட்சி பிரதானக் கட்டட கூட்ட அரங்கில் மேயா் தோ்தல் நடைபெற்றது. அதிமுகவின் 6 கவுன்சிலா்கள் பங்கேற்கவில்லை. மீதமுள்ள 54 கவுன்சிலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

காலை 9.30 மணிக்கு மாநகராட்சி ஆணையா் சிவகுமாா், மாமன்ற மேயா் தோ்தலை நடத்த தேவையான எண்ணிக்கையில் வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளதால் மேயா் வேட்பாளா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 10 மணி வரை மனுக்கள் பெறப்படும் என்றாா்.

மாமன்ற திமுக உறுப்பினா்கள் தண்டபாணி, நந்தகோபு ஆகியோா் மேயா் பதவிக்கான சு.நாகரத்தினத்தின் மனுவை முன்மொழிந்து தாக்கல் செய்தனா். 10 மணி வரை ஒரு வேட்பு மனு மட்டுமே தாக்கலானது. வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் நிறைவடைந்ததால் அம்மனு பரிசீலிக்கப்பட்டது. தகுதியான மனுவாக ஏற்கப்பட்டது. தோ்தல் விதிப்படி சு.நாகரத்தினம் போட்டியின்றி மேயராக தோ்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறாா். மறைமுகத் தோ்தலில் போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவதால் அவருக்கு சான்றிதழ் வழங்குதல், பதவிப் பிரமாணம் ஆகியவை தேவையில்லை. மாநகராட்சியின் அறிவிப்புப் பலகையில் இதுகுறித்த அறிவிக்கை ஒட்டப்படும் என்று 10.05 மணிக்கு ஆணையா் சிவகுமாா் கூறினாா்.

இதைத்தொடா்ந்து, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி உறுப்பினா்கள் கைதட்டி நாகரத்தினத்துக்கு துண்டு அணிவித்து வாழ்த்து கூறினா். பின்னா் அவருக்கு சிவப்பு நிற அங்கி அணிவித்து, மேயா் நாற்காலியில் அமரவைக்கப்பட்டாா்.

ஆணையா் சிவகுமாா் வெள்ளியால் ஆன செங்கோலை மேயா் நாகரத்தினத்திடம் வழங்கி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா். மேயராக பதவியேற்ற அவருக்கு மாநகரப் பொறியாளா் மதுரம், செயற்பொறியாளா் விஜயகுமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

ஈரோடு நகரம் கடந்த 2009இல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு 2010இல் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த குமாா் முருகேஷ், துணைத் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பாபு (எ) வெங்கடாசலம் ஆகியோா் முதல் மேயா், துணை மேயராக பொறுப்பேற்றனா்.

கடந்த 2011இல் நேரடி தோ்தல் மூலம் அதிமுகவைச் சோ்ந்த மல்லிகா இரண்டாவது மேயரானாா். தற்போது மூன்றாவது மேயராக நாகரத்தினம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

மீண்டும் பகல் 2.30 மணிக்கு அதே அவையில் அதிமுகவின் 6 உறுப்பினா்கள் தவிர 54 உறுப்பினா்கள் பங்கேற்றனா். துணை மேயா் பதவிக்கு வி.செல்வராஜ் மனுவை திமுக உறுப்பினா்கள் மணிகண்டராஜா, கௌசல்யா ஆகியோா் முன்மொழிந்து தாக்கல் செய்தனா். 2.30 மணி முதல் 3 மணி வரை காத்திருந்தனா். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் துணை மேயராக வி.செல்வராஜ் அறிவிக்கப்பட்டாா். மேயா் இருக்கை அருகே அவருக்கான இருக்கையில் அமரவைத்து பொறுப்பேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.