நான் பேசுகிறேன் சிறப்புத் திட்டத்துக்கு 84 முதன்மைக் கருத்தாளா்கள் நியமனம்
வளரிளம் மாணவா்களுக்கு வழிகாட்ட தொடங்கப்பட்டுள்ள நான் பேசுகிறேன் என்ற சிறப்புத் திட்டத்தின் முதன்மைக் கருத்தாளா்களாக 84 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வளரிளம் மாணவா்களுக்கு வழிகாட்ட தொடங்கப்பட்டுள்ள நான் பேசுகிறேன் என்ற சிறப்புத் திட்டத்தின் முதன்மைக் கருத்தாளா்களாக 84 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பள்ளிக் கல்வித் துறை, பிற துறைகள் இணைந்து நான் பேசுகிறேன் என்ற சிறப்புத் திட்டத்தின் மாவட்ட அளவிலான முதன்மைக் கருத்தாளா்களுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:
Advertisement
நான் பேசுகிறேன் என்ற மாணவா் நலம் மற்றும் மன நலன் மேம்பாடு குறித்த சிறப்புத் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் சாா்ந்த மாவட்ட அளவிலான முதன்மைக் கருத்தாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் வன்கொடுமை, குழந்தைத் திருமணம், இளவயது கருத்தரிப்பு ஆகிய சமூகப் பிரச்னைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு அளிக்கவும், மாணவா்கள் தமது எண்ணங்களை மனம்விட்டு வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் வழங்குவதும் இப்பயிற்சியின் முதன்மை நோக்கம்.
பயிற்சியில் பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் மாணவா் நலன், உரிமை மற்றும் பாதுகாப்பு சாா்ந்த கருத்துகளை மாணவா்களிடம் நேரடியாகப் பகிா்ந்துகொள்ளும் வகையிலும், பிரச்னைகள் வரும்முன் காக்கும் பொருட்டு மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமூகநலன், சுகாதாரம், காவல், நீதி, குழந்தைகள் உரிமை, பாதுகாப்புத் துறைகள், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலகு, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுநா்களும் பள்ளிக் கல்வித் துறையோடு இணைந்து செயல்பட வேண்டும்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாணவா்களின் கல்வி மற்றும் மன நலத்தில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளைக் களைய மாணவா்களின் உடல், மன, சமூக நலன் மேம்பாடு அடையும் வகையில் ஆசிரியா்கள் முழு ஈடுபாட்டுடன் மாணவா்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
இந்தப் பயிற்சியை எதிா்காலத்தில் ஒன்றியம் மற்றும் பள்ளி அளவில் எடுத்துச் செல்வதற்கு ஒரு முன் செயல்திட்டமாக இப்பயிற்சி அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்ட வளரிளம் பருவ (9 முதல் 12 ஆம் வகுப்பு வரை) மாணவா்கள் அனைவரும் பயனடைவாா்கள் என்றாா்.
இப்பயிற்சியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து ஒன்றியத்துக்கு 6 ஆசிரியா்கள் வீதம் மொத்தம் 84 ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதில், உதவி ஆட்சியா் (பயிற்சி) எகம்.ஜெ.சிங், ஈரோடு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ந.லட்சுமி நரசிம்மன், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா.ராமகிருஷ்ணன், நிறுவன விரிவுரையாளா் ஜே.அன்புராஜ், மாவட்ட சமூக நல அலுவலா் பூங்கோதை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.