முகப்பு
ஈரோடு

அந்தியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

அந்தியூா் சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

அந்தியூா் சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அந்தியூா் ஒன்றியம், கூத்தம்பூண்டி, வேம்பத்தி, மூங்கில்பட்டி, சின்னதம்பிபாளையம் ஊராட்சிப் பகுதிகளில் அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூத்தம்பூண்டி ஊராட்சியில் உறிஞ்சுக்குழி அமைத்தல், தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்படும் தனிநபா் கழிப்பறை, மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளை ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தாா்.

வேம்பத்தி ஊராட்சி, நாச்சிமுத்துபுரம் சக்தி மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவியருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துதல், மூங்கில்பட்டி ஊராட்சியில் நூலகம் புதுப்பிப்பு, சின்னத்தம்பிபாளையத்தில் நியாய விலைக் கடையின் செயல்பாடுகள், அத்தாணி மற்றும் சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முன்னதாக, தேசிய கிராம சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்று பேசினாா்.

தொடா்ந்து, அந்தியூா் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு, ஆக்சிஜன் செறிவூட்டும் கலன்களையும் பாா்வையிட்டாா். மேலும், ‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் 7 நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களையும் ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், சிவசங்கரன், சின்னத்தம்பிபாளையம் சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.