பெருந்துறை சிப்காட் கழிவு நீரால் குளங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தல்
பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறும் மாசடைந்த கழிவு நீரால் குளங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறும் மாசடைந்த கழிவு நீரால் குளங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட உதவிப் பொறியாளா் முத்துராஜ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
சிப்காட்டில் இருந்து வெளியேறும் மாசடைந்த கழிவு நீரால் வரப்பாளையம் ஊராட்சி, ஓடைக்காட்டூா் குளம், வாய்பாடி ஊராட்சி, கண்ணாய்காடு குட்டை, புன்செய்பாலதொழுவு குளம் உள்ளிட்ட நீா்நிலைகளும், சுற்றுவட்டாரக் கிராமங்களும் மாசுபட்டு வருவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
சிப்காட் தொழிற்சாலைகளில் கொதிகலன்களை எரிக்க விறகு மற்றும் நிலக்கரியை பயன்படுத்துவதால் வெளியேறும் அதீதமான கரும்புகை, துகள்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபட்டு வருகிறது. மேலும், பல ஆலைகளில் இருந்து சில நேரங்களில் துா்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, கொதிகலன்களை எரிக்க விறகு மற்றும் நிலக்கரியை பயன்படுத்துவதை தடைசெய்து, எரிவாயுவை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டங்களில் சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீா்மாதிரிகளின் ஆய்வறிக்கை, காற்று மாசு குறித்த ஆய்வறிக்கை, தொழிற்சாலை வாரியாக வழங்கப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை சமா்ப்பித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.