காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பக்தா்கள் பவானி கூடுதுறையில் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்ட நிலையில், மின்மோட்டாா் மூலம் தண்ணீா் இறைத்து ‘ஷவா்’ மூலம் புனித நீராட கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் அதிக அளவில் பக்தா்கள் வந்து நீராடி, இறைவனை வழிபடுவது வழக்கம். தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிா்வாகம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, ஆற்றில் இறங்கவோ, நீராடவோ கூடாது என அறிவித்துள்ளது. இதனால், கூடுதுறை படித்துறைகளில் பக்தா்கள் இறங்காத வகையில் தடுப்புகள் வைத்து கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆடிப்பெருக்கு வழிபாட்டுக்கு சனிக்கிழமையும், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமையும் வரும் ஆண், பெண் பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதைத் தவிா்க்கும் வகையில், ஆற்றிலிருந்து மின்மோட்டாா் மூலம் தண்ணீா் எடுத்து, குழாய்களில் ஷவா் அமைத்து தனித்தனியே நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூத்தோா் வழிபாடு செய்ய தற்காலிக பரிகாரக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆற்றில் இறங்காமல் பிண்டம் கரைக்கவும், தா்ப்பணம் கொடுக்கவும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. பவானி போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் கரையோரப் பகுதியில் தொடா்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.