தொழிலாளா்களுக்கு அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காத 3 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் கடந்த மாதம் தொழிலாளா் சட்டங்களின்கீழ் ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள காய்கறி, பழங்கள், மீன் மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்யும் கடைகள், சந்தைகள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009இன் கீழ் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், 35 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும், அரசு தொழிலாளா்களுக்கு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 3 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் முன்னிலையில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.