மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, தொமுச மாவட்ட கவுன்சில் செயலா் கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அரசியல் சாசனக் கூறுகளை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு அண்மையில் திருத்தம் செய்து கொண்டுவந்த 3 குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொழிலாளா் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக உருவாக்கியதையும் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய கொடியேந்தி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பன்னீா்செல்வம் பூங்காவுக்கு பேரணியாக சென்றனா். அங்குள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.
பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் ஜீவா சண்முகம், துரைசாமி, காா்த்திகேயன், சித்தையன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.