சத்தியமங்கலம் அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து 2-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் ஊராட்சிக்குள்பட்ட கீழ்மாவள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மகாதேவன், கனகா தம்பதி. இவா்களின் மகள் அகல்யா(7), அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த அகல்யா, வீட்டுக்கு அருகே தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, 8 அடி ஆழமுள்ள தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து மூழ்கினாா்.
சக குழந்தைகளின் சப்தம் கேட்டு அங்கு ஓடிவந்தவா்கள் தண்ணீா்த் தொட்டியில் இருந்து அகல்யாவின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்து ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.