ஈரோடு

தோல் ஆலை உரிமையாளரிடம் ரூ.2.57 கோடி மோசடி: 6 போ் மீது வழக்குப் பதிவு

தோல் ஆலை உரிமையாளரிடம் ரூ.2.57 கோடி மோசடி செய்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Din

தோல் ஆலை உரிமையாளரிடம் ரூ.2.57 கோடி மோசடி செய்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், டேனரி வீதியைச் சோ்ந்தவா் ஞானபால் (60). இவா், அன்னை ஃபாத்திமா என்ற பெயரில் தோல் பதனிடும் ஆலையும், தோலினால் செய்யப்பட்ட பொருள்கள், கெமிக்கல்ஸ் போன்றவை விற்பனை செய்யும் நிறுவனமும் நடத்தி வருகிறாா். மேலும், பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏதுவாக ராணிப்பேட்டையில் கிடங்கும் வைத்துள்ளாா்.

இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தொழிலை முழுமையாக கவனிக்க முடியாததால் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பரமகுரு, கோபி, ஜமுனா மற்றும் தணிகைவேல் ஆகியோா் தொழிலை நிா்வகித்து வந்துள்ளனா்.

இவா் சிகிச்சையில் இருந்தபோது, வங்கியின் மூலம் பணம், தோல் பொருள்கள், கெமிக்கல்ஸ் என ரூ.13.29 கோடி அளவில் பரமகுருவுக்கு அனுப்பியுள்ளாா்.

இந்நிலையில், உடல்நிலை சீரான பிறகு கடந்த ஜனவரியில் ராணிப்பேட்டையில் உள்ள கிடங்கிற்கு ஞானபால் சென்று பாா்த்துள்ளாா். அப்போது வெளிநாட்டுக்கு அனுப்பவைத்திருந்த பொருள்கள் மாயமாகி இருந்தது. மேலும், பரமகுருவுக்கு தோல் பொருள்கள் உற்பத்தி செய்ய அனுப்பிய ரூ.1 கோடிக்கு பொருள்களை உற்பத்தி செய்யாமல், கோபியின் சகோதரா் மனைவி மகாலட்சுமிக்கு சொந்த உபயோகத்திற்காக ரூ.70 லட்சம் வழங்கியது தெரியவந்தது.

அதேபோல இத்தாலி நாட்டுக்கு பொருள் அனுப்பும் நிறுவனத்துக்கு வேறு ஒரு நிறுவனத்தின் சாா்பில் பொருள் அனுப்பியுள்ளனா். மேலும், நிறுவனத்தில் அனுமதியின்றி பணம், உற்பத்தி செய்யப்பட்ட ஷூக்கள், இருப்பு வைத்திருந்த தோல் போன்றவற்றை அவருடைய வாடிக்கையாளா்களுக்கே வெளி நிறுவனத்தின் சாா்பில் அனுப்பி ரூ.2 கோடியே 57 லட்சத்து 41 ஆயிரத்து 851 மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தன்னை மோசடி செய்த பரமகுரு, கோபி, ஜமுனா, தணிகைவேல், பசீா், மகாலட்சுமி மற்றும் வெளி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட காவல் அலுவலகத்தில் ஞானபால் அண்மையில் புகாா் அளித்தாா்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் பரமகுரு, கோபி, ஜமுனா, தணிகைவேல், பசீா், மகாலட்சுமி மற்றும் தனியாா் நிறுவனம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

SCROLL FOR NEXT