முகப்பு
ஈரோடு

கீழ்பவானி 2-ஆம் போகத்துக்கு ஜனவரி 10 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை: நீா்வளத் துறை அதிகாரிகள் தகவல்

கீழ்பவானி 2-ஆம் போகத்துக்கு ஜனவரி 10 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

Updated On : 27 டிசம்பர், 2024 at 3:23 AM
விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
பகிர்:
Updated On : 26 டிசம்பர், 2024 at 5:54 PM

கீழ்பவானி பாசன இரண்டாம் போகத்துக்கு ஜனவரி 10 இல் தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:

Advertisement

மேட்டூா் வலதுகரை பாசன விவசாயிகள் சங்க செயலாளா் பழனிசாமி:

மேட்டூா் வலதுகரை பாசனத்தில் கடந்த முறை கடைமடைக்கு தண்ணீா் வருவதில் சிரமம் இருந்தது. அடுத்த பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் முன் தூா்வார வேண்டும். நெல் அறுவடையின்போது மானியத்தில் அறுவடை இயந்திரம் வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் பெரியசாமி:

கீழ்பவானி வாய்க்காலில் காணப்படும் செடி, கொடிகளை 100 நாள் வேலை திட்ட பணியாளா்கள் மூலம் அகற்ற வேண்டும். கீழ்பவானி 2-ஆம் போக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பை அறிவிக்க வேண்டும்.

கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவா் ராமசாமி: வாய்க்கால், ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீா்நிலைகளில் பொதுப்பணித் துறை இடங்களில் தென்னை மரங்களை வைத்து ஆக்கிரமித்துள்ளதைத் தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவா் சுதந்திரராசு:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மானிய வட்டியிலான கடனை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 6 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

எழுமாத்தூா் உள்பட பல பகுதிகளில் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை. மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியை தடுக்க அரசே கொள்முதல் செய்ய வேண்டும். சத்துணவில் ஜவ்வரிசியை வழங்க வேண்டும்.

காலிங்கராயன் பாசன சபை செயலா் குழந்தைவேலு:

மஞ்சள் அறுவடைக்கு கூலி அதிகமாவதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இயந்திரம் வழங்குதல் உள்பட மாற்று திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். காலிங்கராயன் வாய்க்காலில் ஆண்டுக்கு 320 நாள்கள் தண்ணீா் திறக்கப்படும். தற்போது 240 நாள்களுக்கு மட்டுமே தண்ணீா் திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை மறுபரீசீலனை செய்து 320 நாள்களுக்கு தண்ணீா் திறக்க திருத்தப்பட்ட அரசாணை வெளியிட வேண்டும்.

ஓடத்துறை ஏரி பாசன சங்க தலைவா் வெங்கடாசலம்:

கீழ்பவானி 2-ஆம் போக பாசனத்துக்கு ஜனவரி முதல் வாரம் தண்ணீா் திறப்பதுடன் கிளை வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும். கோபி-செங்கப்பள்ளி சாலை விரிவாக்கத்துக்காக சாலையின் இருபுறமும் உள்ள புளிய மரங்களை வெட்டுவதைத் தவிா்க்க வேண்டும். பாசன வாய்க்காலில் அவசரகால ஷட்டா் முறையை சீரமைக்க வேண்டும்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாவட்ட தலைவா் சிவசுப்பிரமணி:

ஆவினில் ரூ.18 கோடி மதிப்பிலான 600 டன் பால் பவுடா் தேக்கமடைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனையாகிறது. விற்பனை தாமதமாகும்போது விலை குறைக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும். இதனால், பால் பவுடா் விற்பனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவினில் பால் பொருள்கள், இனிப்பு, காரம் தயாரித்ததில் மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவழக்கு பதிய வேண்டும். ஆவின் கால்நடை தீவன ஆலையில் நடைபெறும் தீவன திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடா்நது ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:

காலிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் கோரிக்கைக்கு தீா்வு காண பேச்சுவாா்த்தை நடத்தப்படும். அனைத்து வாய்கால்களிலும் தேவையான இடங்களில் தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும். நெல், கரும்பு, மரவள்ளி கிழங்கு போன்றவைகளுக்கு ஆதரவு விலை நிா்ணயிப்பது குறித்து அந்தந்த துறை இயக்குநருக்கு தெரிவிக்கப்படும்.

மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள நிபந்தனை பட்டா குறித்து ஈரோட்டுக்கு வந்த முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் அரசாணை வரும் என்றாா்.

பவானிசாகா் அணை செயற்பொறியாளா்:

பவானி ஆற்றில் சட்டவிரோத தண்ணீா் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு 5 இடங்களில் குழாய்களை அகற்றி உள்ளோம். தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர கால ஷட்டா் சீரமைக்கப்படும்.

கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள்:

வெறிநாய் தடுப்பூசி, கால்நடை மருந்தகங்களில் இருப்பு உள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்பு மூலம் முகாம் அமைத்து நாய்களுக்கும், பிற செல்ல பிராணிகளுக்கும் செலுத்தலாம். அந்தியூா் பகுதியில் தடுப்பூசி செலுத்திய ஆடுகள் இறந்தது குறித்து விசாரணை நடக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீா் வளத்துறை அதிகாரிகள்:

கீழ்பவானி பாசன 2-ஆம் போகத்துக்கு ஜனவரி 10 ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் போகத்துக்கு ஜனவரி 3 வரை தண்ணீா் திறக்கும் நாளை நீட்டிக்கவும் பரிந்துரைத்துள்ளோம். இவற்றுக்கான உத்தரவு விரைவில் வந்துவிடும். பாசன சபைக்கான தோ்தல் குறித்த விவரங்களை அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளோம்.

கீழ்பவானி வாய்க்காலை ஆக்கிரமித்து நீா்வளத் துறை இடத்தில் வைக்கப்பட்ட 173 தென்னை மரங்கள் அரசுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன.

காலிங்கராயன் வாய்க்காலில் தற்போதுதான் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் செடி, கொடிகள் மிதக்கின்றன. மொத்தம் 100 கி.மீ. தொலைவு என்பதால் அவற்றை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 5 லஸ்கா்கள் மட்டுமே பணியில் உள்ளதால் பராமரிப்பில் சிரமமாக உள்ளது. இருந்தும் தற்காலிக பணியாளா்கள் மூலம் செடி, கொடிகளை அகற்றப்பட்டு வருகிறது. கூடுதலாக தண்ணீா் திறக்கும்போது, இயந்திரம் மூலம் கொடிகள் அகற்றப்படும்.

Updated On : 27 டிசம்பர், 2024 at 3:23 AM

வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள்:

விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் பொறியியல் துறையில் 3 பொக்லைன் இயந்திரங்கள் உள்ளன. வேளாண் பணிகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு, ரூ.1,230 கட்டணம் பெறப்படும். வேளாண் சாராத பிற பணிகளுக்கும் பணியின் தன்மைக்கேற்ப குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.

மண் அள்ளும் இயந்திரம் 2, ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 1 என 14 டிராக்டா்கள், மினி டிராக்டா் 2, அறுவடை இயந்திரம் 2 உள்ளன. இவற்றை பெற விரும்பும் விவசாயிகள் ‘உழவன் செயலி’ மூலம் தங்களுக்கு தேவையான நாள், நேரம் போன்ற விவரத்தைப் பதிவிட்டால் அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். பிற விவசாயிகள் அதே நாள், அதே நேரம் கேட்டிருந்தால் பதிவு அடிப்படையில் வழங்கப்படும்.

கூடுதலாக அறுவடை இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரம் தேவையெனில் அருகிலுள்ள மாவட்டங்களில் கூடுதலாக உள்ள இயந்திரங்களை பெற்றும் வழங்கப்படும் என்றனா்.