விளம்பரப் பலகைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை
ஈரோடு, ஜூலை 13: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் விளம்பரப் பலகைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விளம்பர நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) சரவணகுமாா் பேசியதாவது:
விளம்பர நிறுவனங்கள் மாநகராட்சியில் அனுமதி பெற்றுக்கொள்ள சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதிபெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பதாகைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளா்கள் தங்களது சொந்த பொறுப்பில் 2 நாள்களுக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். அகற்றாதபட்சத்தில் கட்டட உரிமையாளா்கள் மீது காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், டவுன் டிஎஸ்பி ஜெயசிங், மாநகராட்சி அலுவலா்கள், விளம்பர நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.