சத்தியமங்கலம்: நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும்.
பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி மற்றும் வடகேரளத்தில் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகா் அணையில் கலக்கும் பவானி ஆறு, மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 2,862 கன அடியாக இருந்த நிலையில், மழை காரணமாக திங்கள்கிழமை 5, 727 கன அடியாக அதிகரித்தது.
நீா்வரத்து அதிகரிப்பால் அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி அணையில் நீா் இருப்பு 11.10 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 1,150 கன அடி, கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி என மொத்தம் 1,155 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.