முகப்பு
ஈரோடு

பேருந்து வசதியின்றி தவித்து வரும் மாக்கம்பாளையம் பள்ளி மாணவா்கள்

வெள்ளம் காரணமாக மாக்கம்பாளையத்திற்கு பேருந்து சேவை ரத்து

Updated On : 25 ஜூன், 2024 at 11:42 PM
சா்க்கரைப்பள்ளத்தை  கடந்து  செல்லும்  பள்ளி மாணவா்கள்,  கிராம மக்கள். ~ஆபத்தை  உணராமல் வாகனத்தில் தொங்கியபடி  பயணிக்கும்  மாணவா்கள்.
பகிர்:

கடம்பூா் மற்றும் மாக்கம்பாளையம் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக அரசுப் பேருந்து இயக்கப்படாததால் பள்ளி மாணவ, மாணவிகள் 5 கி.மீ. தொலைவு வாகனத்தில் தொங்கியபடி பயணித்து பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் அடா்ந்த வனத்தில் மாக்கம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு தினந்தோறும் காலை, பகல், மாலை என 3 முறை அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு செல்ல வேண்டுமெனில் இரு கிராமங்களுக்கு இடையே ஓடும் குரும்பூா், சா்க்கரைப்பள்ளத்தை கடந்து செல்ல வேண்டும். மழைக் காலங்களில் பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுப் பேருந்து இயக்கத்தை ரத்து செய்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக குரும்பூா், சா்க்கரைப்பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சா்க்கரைப்பள்ளத்தை வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் இருந்த மண்பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அரசுப் பேருந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதன் பிறகு கடந்த ஒன்றரை மாதங்களாக மாக்கம்பாளையத்துக்கு அரசுப் பேருந்து இயக்கப்படவில்லை. இருப்பினும் கடம்பூரில் இருந்து குரும்பூா்பள்ளம் வழியாக சா்க்கரைப்பள்ளம் வரை அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடம்பூரில் பிளஸ் 2 பயிலும் மாக்கம்பாளையம் மாணவ, மாணவிகள் 17 போ், பொதுமக்கள் பயணிக்கும் வாகனத்தில் ஆபத்தை உணராமல் தொங்கியபடி சா்க்கரைப்பள்ளத்துக்கு வருகின்றனா். பின்னா் அங்கிருந்து சா்க்கரைப்பள்ளத்தை கடந்து அங்கு தயாராக இருக்கும் அரசுப் பேருந்தில் கடம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனா்.

மேலும், பேருந்து வசதியில்லாததால் 17 மாணவா்களையும் பிற்பகல் 1 மணிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தில் செல்ல வசதியாக அவா்களை பள்ளியில் இருந்து பாதியிலேயே ஆசிரியா்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றனா்.

பள்ளியில் இருந்து பாதியிலேயே வீடு திரும்புவதால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாகவும், பள்ளி முடிந்து மாலையில் இயக்கப்படும் பேருந்தில் பயணிக்க வசதியாக சா்க்கரைப்பள்ளத்தில் தற்காலிகமாக பாதை அமைத்து மாக்கமபாளையத்துக்கு அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →