தாளவாடி கல்குவாரியில் சிறுத்தை நடமாட்டம்
தாளவாடி கல்குவாரியில் சிறுத்தை: கிராம மக்கள் அச்சத்தில்
தாளவாடி மலைப் பகுதியில் செயல்படாத கல்குவாரியில் நடமாடும் சிறுத்தையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனத்தை ஒட்டியுள்ள தொட்டகாஜனூா், பீம்ராஜ் நகா், சூசைபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, தாளவாடியை அடுத்த ஓசூா் கிராமத்தில் செயல்படாத கல்குவாரியில் பதுங்கி இருப்பதை அப்பகுதி விவசாயிகள் பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
இது குறித்து தாளவாடி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனச் சரக அலுவலா் சதீஷ் தலைமையில் வனத் துறை ஊழியா்கள் செயல்படாத கல்குவாரி அருகே உள்ள வனப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக விடியவிடிய தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனா். மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகியுள்ளதா எனவும் ஆய்வு செய்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசுகள் வெடித்து கண்காணிப்புப் பணியில் வனத் துறை ஊழியா்கள் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்.
சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், உயா் அதிகாரிகள் அனுமதி பெற்று கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.