மது, லாட்டரி விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோட்டில் மது மற்றும் லாட்டரி விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாநகராட்சி அதியமான் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சட்ட விரோதமாக மது விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் நடைபெற்று வருவதாகக்கூறி, அந்தப் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஈரோடு-பவானி சாலையில் வெள்ளிக்கிழமை காலை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் விஜயன் மற்றும் போலீஸாா் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது போலீஸாரிடம் பேசிய பொதுமக்கள், எங்கள் பகுதியில் கடந்த சில நாள்களாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதேபோல தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையும் நடக்கிறது. மதுகுடிக்க வருபவா்களால் பெண்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனா். அதிகாரிகளிடம் பலமுறை புகாா் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே கடந்த சில நாள்களாக எங்கள் பகுதியில் வெளி நபா்கள் நடமாட்டமும் அதிக அளவில் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்று, சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவா்கள் மீதும், லாட்டரி சீட்டு விற்பனை செய்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். மது மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். போராட்டம் காரணமாக ஈரோடு-பவானி சாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.