ஓடும் ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பிரசவம்
Updated On : 22 மார்ச், 2024 at 9:01 PM
சத்தியமங்கலம், மாா்ச் 22: சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கா்ப்பிணிக்கு வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது. சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்புலட்சுமி (23). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு வெள்ளிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து 108 ஆம்புலன்ஸுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சுப்புலட்சுமியை ஆம்புலன்ஸில் ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். செல்லும் வழியிலேயே சுப்புலட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானதால், அவசர கால மருத்துவ நிபுணா் காா்த்திகேயன் வழியிலேயே சுப்புலட்சுமிக்கு பிரசவம் பாா்த்தாா். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும்-சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.