தொட்டகோம்பை மலை கிராமத்தில் பள்ளி தொடங்க கோரிக்கை
பழங்குடியின குழந்தைகள் தடையின்றி கல்வி கற்க தொட்டகோம்பை மலை கிராமத்தில் தொடக்கப் பள்ளி தொடங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பழங்குடியின குழந்தைகள் தடையின்றி கல்வி கற்க தொட்டகோம்பை மலை கிராமத்தில் தொடக்கப் பள்ளி தொடங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெருமுகை ஊராட்சி, தொட்டகோம்பை வனக் கிராமத்தில் 2006 வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வனக் கிராம சபைக் கூட்டம் மாதேஸ்வரன் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிராம சபைக்கு தலைவா் மோகன் தலைமை வகித்தாா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
Advertisement
வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தனிநபா் நில உரிமைச் சான்று இன்னும் வழங்கப்படாமல் உள்ள 40 பழங்குடியின குடும்பங்களுக்கு பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த நிலங்களை அளவீடு செய்து நில உரிமைச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தொட்டகோம்பையிலேயே செயல்பட்டு வந்த தேசிய குழந்தைத் தொழிலாளா் பள்ளி மூடப்பட்டுள்ளதால் 1-ஆம் வகுப்பிலிருந்து 9-ஆம் வகுப்பு வரை 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் 8 கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ள வலையபாளையம் உயா்நிலைப் பள்ளிக்கு அடா்ந்த வனத்தின் வழியாக ஒரு சிறிய வேன் மூலமாக சென்று வருகின்றனா். பல குழந்தைகள் பள்ளி செல்ல புறப்பட்டு வந்தும் வாகனத்தில் உள்ள இடநெருக்கடியால் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீடு திரும்புகின்றனா்.
இதனால் மாணவா்களின் கல்வி இடைநிற்றல் ஏற்படுத்த வாய்ப்பாக அமையும். இந்நிலையை மாற்றி தொட்டகோம்பையிலே தொடக்கப் பள்ளியை தொடங்கி பழங்குடியின குழந்தைகள் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தரவேண்டும்.
தொட்டகோம்பை பழங்குடி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையம் தொடங்க வேண்டும். கள்ளிப்பட்டியிலிருந்து தொட்டகோம்பை வரை பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
பேருந்து மற்றும் பெரிய வாகனங்கள் வந்து செல்ல சஞ்சீவிராயன் அணைக்கட்டு கால்வாய் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை அகலப்படுத்தி தர வேண்டும். தற்போது பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை மற்றும் ராகி பயிா்களை காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்துகின்றன. அதைத் தடுக்க இரவு முழுவதும் காட்டிலேயே தங்கி சப்தம் போட்டு விரட்டினாலும் அவை போவது இல்லை. இதைத் தடுத்திட விவசாய நிலத்தை சுற்றிலும் குறைந்த அழுத்த மின்வேலி அமைத்து, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே நில உரிமைச் சான்று பெற்றுள்ள 40 பழங்குடியின மக்களுக்கு பிரதமரின் கிஸான் திட்டம் மூலம் வழங்கப்படும் ரூ. 6,000 உதவித்தொகை கிடைக்க வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட 38 தொகுப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு பெற மின்சார வாரியத்துக்கு ரூ.4000 வைப்புத்தொகை செலுத்த இயலாததால், அந்த வீடுகள் மின்வசதியின்றி உள்ளன. எனவே மாவட்ட நிா்வாகம் மூலமாக வைப்புத்தொகை செலுத்தி மின் இணைப்பு கிடைத்திட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில நிா்வாகி வி.பி.குணசேகரன் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனா்.