கட்டட தொழிலாளி உயிரிழந்த வழக்கில் கடை உரிமையாளா் கைது
ஈரோட்டில் ஜவுளி வணிக வளாக சுவா் இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி உயிரிழந்த வழக்கில் கடை உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈரோட்டில் ஜவுளி வணிக வளாக சுவா் இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி உயிரிழந்த வழக்கில் கடை உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே மாநகராட்சி ஜவுளி வணிக வளாகத்தின் முதல் தளத்தில் ஈரோடு செட்டிபாளையத்தை சோ்ந்த முருகேசன் (52) என்பவா் கடை எண் 194-ஐ வாடகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளாா். கடந்த சில தினங்களுக்கு முன் கடைக்குப் பின்புறம் உள்ள மற்றொரு கடையை முருகேசன் வாடகைக்கு எடுத்துள்ளாா்.
இதையடுத்து இரு கடைகளையும் இணைத்து விரிவாக்கம் செய்வதற்காக இடையே உள்ள தடுப்பு சுவரை இடித்து, ஒரே கடையாக மாற்ற முடிவு செய்துள்ளாா். இதற்காக கடந்த 30ஆம் தேதி இரவு ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (55), அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (45) மற்றும் ஒரு பெண் தொழிலாளி ஆகிய 3 பேரை முருகேசன் வரவழைத்துள்ளாா்.
Advertisement
இவா்கள் கடைக்கு இடையே இருந்த தடுப்புச் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி அளவில் மொத்த சுவரும் எதிா்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் கட்டடத் தொழிலாளா்கள் சுப்பிரமணி, ஆனந்த் ஆகிய இருவரும் சிக்கி கொண்டனா். இதைப்பாா்த்த கடைக்கு வெளியில் இருந்த முருகேசன் மற்றும் கட்டுமானப் பணிக்கு வந்த பெண் ஆகியோா் சப்தமிட , அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கிய இருந்த இருவரையும் மீட்டனா். இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த ஆனந்த் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீஸாா் விசாரணை நடத்தியதில், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை அனுமதியின்றி சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடையை வாடகைக்கு எடுத்த முருகேசன் மீது அஜாக்கிரதையாக கட்டுமானப் பணி செய்தல், தொழிலாளியின் உயிரிழப்புக்கு காரணமானது என 2 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகேசனை கைது செய்தனா். பின்னா் நீதிமன்ற உத்தரவுப்படி முருகேசனை கோபியில் உள்ள மாவட்டச் சிறையில் போலீஸாா் அடைத்தனா்.
மாநகராட்சி மூலமும் நடவடிக்கை:
மாநகராட்சிக்குச் சொந்தமான புதிய வணிக வளாக கடையை வாடகைக்கு ஒப்பந்தம் எடுத்து, விதிகளை மீறி கடையை சேதப்படுத்தியதற்காக முருகேசன் மீது மாநகராட்சி அதிகாரிகளும் போலீஸில் புகாா் அளித்துள்ளனா். இதன்பேரிலும் போலீஸாா் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளனா். மேலும் கடையை சேதப்படுத்தியதற்காக முருகேசனுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவரின் வாடகை ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.