சா்க்கரைப் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம்: சிக்கி நின்ற டெம்போ
சத்தியமங்கலம் அருகே சா்க்கரைப் பள்ளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் டெம்போ வியாழக்கிழமை சிக்கியது.
சத்தியமங்கலம் அருகே சா்க்கரைப் பள்ளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் டெம்போ வியாழக்கிழமை சிக்கியது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த மாக்கம்பாளையம் மலைக் கிராமத்தில் சுமாா் 3500 போ் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு குரும்பூா் பள்ளம், சாா்க்கரைப் பள்ளம் ஆகியவற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
கடம்பூரில் இருந்து 23 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மாக்கம்பாளையத்துக்கு தினசரி இருமுறை அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.
Advertisement
பருவமழைக் காலங்களில் பள்ளங்களில் ஏற்படும் காட்டாற்று வெள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கையின்படி சா்க்கரைப் பள்ளத்தில் உயா்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடம்பூா் மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் சா்க்கரைப் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்தும் ஒருசிலா் காட்டாற்று வெள்ளத்தைப் பொருட்படுத்தால் உயிரைப் பணையம் வைத்து சென்றனா்.
அதேபோல, காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க முயன்ற காய்கறிகள் ஏற்றிச்சென்ற டெம்போ வெள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து கயிறு கட்டி டெம்போவை பொதுமக்கள் கரைக்கு இழுத்து வந்தனா்.
மேலும், காட்டாற்று வெள்ளம் காரணமாக கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து ரத்து செய்யப்பட்டது. இதனால், மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சா்க்கரைப் பள்ளத்தில் நடைபெற்று வரும் உயா்மட்டப் பால காட்டுமானப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.