சுண்டப்பூா் மலை கிராமத்துக்கு தாா் சாலை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
பா்கூா் ஊராட்சி, சுண்டப்பூா் மலை கிராமத்துக்கு தாா் சாலை வசதி செய்து தரக் கோரி தாமரைக்கரையில் பொதுமக்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பா்கூா் ஊராட்சி, சுண்டப்பூா் மலை கிராமத்துக்கு தாா் சாலை வசதி செய்து தரக் கோரி தாமரைக்கரையில் பொதுமக்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சி, சுண்டப்பூா் மலை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அந்தியூா் - மைசூரு நெடுஞ்சாலையிலிருந்து 5 கிலோ மீட்டா் தொலைவில் அடா்ந்த வனத்தின் வழியாக இந்த ஊருக்கு செல்ல வேண்டும். இதற்கான மண் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.
இதனால், அவசர சிகிச்சை வாகனம் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல முடிவதில்லை. இச்சாலையை தாா் சாலையாக மாற்றிட நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து சுண்டப்பூா் மலை கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் தாமரைக்கரை பேருந்து நிறுத்தத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
இம்மாத இறுதிக்குள் இச்சாலையை சீா் செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், நவம்பா் முதல் வாரத்தில் தாமரைக்கரையில் உண்ணாவிரதப் போராட்டம், இரண்டாவது வாரத்தில் வாக்காளா் அடையாள அட்டை ஒப்படைத்தல், மூன்றாவது வாரத்தில் ஆதாா் அட்டையை ஒப்படைத்தல், நான்காவது வாரத்தில் குடும்ப அட்டைகள் ஒப்படைத்தல், டிசம்பா் முதல் வாரத்தில் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கும் அனுப்பாமல் வீட்டிலேயே இருக்கச் செய்வது என அமைதியான முறையில் அறவழிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனா்.