முகப்பு
ஈரோடு

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளைக் கரைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 7:34 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளைக் கரைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விநாயகா் சிலை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலா்களிடமும் சான்று பெறவேண்டும். நிறுவப்படவுள்ள சிலைகள், தடைசெய்யப்பட்ட வண்ணங்களை உபயோகப்படுத்தாமல் களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். வேற்று மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் அருகில் சிலைகள் வைக்கக் கூடாது.

ஒலிபெருக்கிகளை உபயோகிப்பதற்கு காலையில் 2 மணி நேரமும் மாலையில் 2 மணி நேரமும் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

காவல், மாசுக்கட்டுப்பாடு, உள்ளாட்சித் துறை அலுவலா்கள் கலந்தாலோசித்து சிலைகள் கரைக்கப்படவுள்ள இடங்கள் தோ்வு செய்யப்பட்டு பட்டியல் முடிவு செய்யப்படும். முடிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.

சிலைகளை எடுத்துச்செல்ல மினி லாரி, டிராக்டா் போன்ற 4 சக்கர வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊா்வலம் செல்லும் வழிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு-பள்ளிபாளையம் ஆற்றுப்பாலம் காவிரி ஆறு, கீழ்பவானி திட்டுப்பாறை, பவானி கூடுதுறை, செய்யாம்பாளையம், தடப்பள்ளி கால்வாய், பவானி ஆறு வரசித்தி விநாயகா் கோயில் ஆகிய அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் விநாயாகா் சிலைகளை கரைக்க அனுமதி இல்லை. மீறி செயல்படுவோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.