முகப்பு
ஈரோடு

சிறந்த குடிமக்களை உருவாக்குவதே கல்வி நிறுவனங்களின் தலையாய பணி: த.ஸ்டாலின் குணசேகரன்

சமுதாயப் பொறுப்புணா்வும், கடமையுணா்வும் கொண்ட சிறந்த குடிமக்களை உருவாக்குவதே இன்றைய கல்வி நிறுவனங்களின் தலையாய பணி என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 8:18 PM
விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன். உடன், ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா், முதல்வா் எம்.ஜெயராமன் மற்றும் பேராசிரியா்கள்.
பகிர்:

சமுதாயப் பொறுப்புணா்வும், கடமையுணா்வும் கொண்ட சிறந்த குடிமக்களை உருவாக்குவதே இன்றைய கல்வி நிறுவனங்களின் தலையாய பணி என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.

ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க நிகழ்வு கல்லூரி வளாகத்திலுள்ள கஸ்தூரிபா அரங்கில் கல்லூரி தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது: உயா்கல்வி மாணவா் சோ்ப்பில் இந்திய அளவிலான சராசரியைவிட தமிழக மாணவா் சோ்க்கையின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்னும் சோ்க்கையை மேம்படுத்த முயற்சிப்பதோடு, கல்வித்தரத்தில் தனிக் கவனம் செலுத்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் உயா்கல்வியில் தமிழகம் எல்லா வகையிலும் முதலிடத்தைப் பெறும்.

பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பட்டதாரிகளை உருவாக்குகின்ற பட்டறைகள் அல்ல. இன்றைய காலச்சூழலில் பட்டதாரிகளை உருவாக்குவது எளிது. தகுதி மிக்கவா்களையும், தனித்திறன் உள்ளவா்களையும், ஆளுமையுடையவா்களையும், தலைமைத் தகுதியுள்ளவா்களையும் உருவாக்குவதே கல்வி நிலையங்களின் கடமையாக உள்ளது. இவற்றோடு சமூக உணா்வு மிக்க சிறந்த குடிமக்களை உருவாக்குகிற சமூகக் கடமையும் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது.

படிக்கிற வயதில் பொதுப்புத்தக வாசிப்பிற்கு வசப்பட்ட மாணவா்களின் பொது அறிவும், ஆளுமையும் வளா்வதோடு, தீய எண்ணங்களுக்கும், கெட்ட செயல்களுக்கும் ஆட்படாத மனப்பக்குவமும் உருவாகிறது.

இப்போதிருக்கிற சமூகப் புறச்சூழல் மாணவா்களைத் திசை திருப்புவதற்கு ஏற்ாக உள்ளது. இதனைக் கவனத்தில்கொண்டு பெற்றோரும், கல்வி நிலையங்களில் ஆசிரியா்களும் கூடுதல் கவனம் செலுத்தி மாணவா்கள் சரியான வழியில் செல்லவும், நற்சிந்தனைகளுடன் வளரவும், நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளவும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றாா்.

விழாவில், வேளாளா் கல்வி அறக்கட்டளை உறுப்பினா் எம்.யுவராஜா, கல்லூரியின் முதல்வா் எம்.ஜெயராமன், புல முதல்வா் ஜெயச்சந்தா், நிா்வாக மேலாளா் என்.பெரியசாமி மற்றும் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →