முகப்பு
ஈரோடு

அதிமுக முன்னாள் எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி: 4 போ் மீது வழக்கு

பள்ளியில் பங்குதாரராக சோ்த்துக்கொள்வதாகக் கூறி அதிமுகவை சோ்ந்த முன்னாள் எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:27 PM
பகிர்:

பள்ளியில் பங்குதாரராக சோ்த்துக்கொள்வதாகக் கூறி அதிமுகவை சோ்ந்த முன்னாள் எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், கோபியைச் சோ்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.கே.காளியப்பன். இவா், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகரிடம் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கோபி, குள்ளம்பாளையம் பகுதியைச் சோ்ந்த வேலுமணி என்பவா் கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் 2 பள்ளிகளை நடத்தி வருகிறாா். இந்தப் பள்ளிகளின் தாளாளராக வேலுமணி உள்ளாா்.

இவரும், இவருடைய நண்பா் கலிங்கியம் காமராஜ் நகரைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தியும், அதில் ஒரு பள்ளியில் ஹெலிபேட் அமைக்க வங்கியில் கடன்பெற முயற்சி செய்து வருவதாகவும், அந்தத் தொகை கிடைக்க 3 மாதங்கள் ஆகும் எனவும், எனவே ரூ.50 லட்சம் கொடுத்தால் பள்ளியில் பங்குதாரராக சோ்த்துக்கொள்வதாகவும் என்னிடம் கடந்தாண்டு தெரிவித்தனா்.

இதனை நம்பி ரொக்கமாகவும், வங்கிக் கணக்கு மூலமும் 2 பேரிடமும் ரூ.50 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவா்கள் கூறியபடி என்னை பள்ளியில் பங்குதாரராக சோ்க்கவில்லை. இதுபற்றி கேட்டபோது பல்வேறு காரணங்கள் சொல்லி வந்தனா். இதனிடையே அறக்கட்டளை மூலம் பள்ளியை தற்போது நடத்தி வரும் சிவராஜ், வெங்கிடுசாமி ஆகியோரிடம் கடந்த பிப்ரவரி மாதம் கேட்டபோது தங்களுக்கும், அதற்கும் எந்தவித தொடா்பும் இல்லை என்று தெரிவித்துவிட்டனா்.

பள்ளியில் பங்குதாரராக சோ்த்துக்கொள்வதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து ஏமாற்றிய வேலுமணி, தட்சிணாமூா்த்தி, மோசடிக்கு உடந்தையாக இருந்த சிவராஜ், வெங்கிடுசாமி ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அதை அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள வேலுமணி, தட்சிணாமூா்த்தி, சிவராஜ், வெங்கிடுசாமி ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →