பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: பாட்டி, பேரன் உயிரிழப்பு
பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பாட்டியும், பேரனும் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா்.
பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பாட்டியும், பேரனும் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா்.
கோபியை அடுத்த பங்களாபுதூா், புன்செய்துறையம்பாளையம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் நந்தகுமாா் (24). இவரது பாட்டி சரஸ்வதி (62). இருவரும் பவானி அருகே உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். பவானி - ஆப்பக்கூடல் சாலையில், ஜம்பை கழுங்கு பாலம் அருகே சென்றபோது எதிரில் அதிவேகமாக வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரில் பயணம் செய்தவா் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா். சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி போலீஸாா் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், நந்தகுமாா் சாலை விபத்தில் உயிரிழந்த தகவலறிந்த இவரது மனைவி இலக்கியா (22), அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். கடந்த ஓராண்டுக்கு முன்னா் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது 4 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதில், இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.