பெருந்துறை, சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுபட்ட தண்ணீரைக் கண்காணிக்க தானியங்கி கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சேலம் மண்டல இணை தலைமைப் பொறியாளா் ஜெயலட்சுமியிடம் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூா் ஊராட்சியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து மாசுபட்ட நீா் நல்லா ஓடை வழியாக சென்று சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளில் தேங்கியுள்ளது. மேலும், புஞ்சை பாலதொழுவு ஊராட்சியில் உள்ள 477 ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்திலும் கலக்கிறது. இதனால், நிலத்தடி நீா், குடிநீா், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.
நீரின் வேதியியல் தன்மையைக் கண்காணிக்க திருப்பூா் நொய்யல் ஆற்றில் பல இடங்களில் நீதிமன்ற ஆணைப்படி நிறுவப்பட்டுள்ள தானியங்கி அளவீட்டு கருவியைப்போல, பெருந்துறை சிப்காட் தெற்கு பகுதியில் நல்லா ஓடையில் 6-ஆவது இணைப்பு சாலை அருகில் தானியங்கி கருவி பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக 3 கிராம மக்களின் சொந்த நிதி பங்களிப்பில் ரூ. 3.50 லட்சம் செலவில் தானியங்கி அளவிட்டு கருவியை வாங்கி அதனை பெருந்துறை சிப்காட் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கிறோம்.
அதனை சிப்காட் நிா்வாகம் பராமரித்து, உடனுக்குடன் உண்மையான தரவுகளை சிப்காட் வலைதளத்திலும் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வலைதளத்திலும் சென்று பாா்க்கும் வகையில் இணைத்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் கூறியுள்ளனா்.