சோலாா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கியது.
ஈரோடு பேருந்து நிலையம், ஈரோடு மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்லும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத் தவிா்க்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் சோலாா் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
சோலாா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கரூா், மதுரை, திருநெல்வேலி, திருச்சி செல்லும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 63 பேருந்துகள் நிற்கும் வகையில் பணிகள் நடைபெற்றன. மேலும் 185 காா்கள், 885 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் மிகப் பெரிய சோலாா் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்து கடந்த நவம்பா் 26-ஆம் தேதி ஈரோட்டுக்கு வந்த முதல்வா் மு.க .ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்துவைத்தாா்.
இதனைத் தொடா்ந்து, சோலாா் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மதுரை, திருச்சி, கரூா், திருநெல்வேலி, வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வியாழக்கிழமை இயங்கத் தொடங்கின. ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சோலாா் புதிய பேருந்து நிலையம் செல்வதற்காக நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.