தருமபுரி அவ்வைவழியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டு நீண்டநேரம் திறக்கப்படாததால் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
தருமபுரி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதற்கு பிறகு சேலம் - தருமபுரி வழித்தடப் பேருந்துகள் அனைத்தும் ஒட்டப்பட்டி வந்தடைந்து, அங்கிருந்து அவ்வைவழி வழியாக தடங்கம் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று, அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்தை அடைந்து வருகின்றன. இதன்காரணமாக அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் அனைத்தும் தருமபுரி நகருக்குள் செல்லும் பயணிகளை ஒட்டப்பட்டியில் இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்த புதிய பேருந்து நிலையத்து செல்கின்றன.
இந்த வழித்தடத்தில் அவ்வைவழியில் ரயில்வே பாதை நெடுஞ்சாலையைக் கடந்து செல்கிறது. இதனால், அந்த வழியே ரயில்கள், சரக்கு ரயில்கள் செல்லும்போது ரயில்வே கேட் அடைக்கப்பட்டு, ரயில்கள் சென்ற பின்பு கேட் திறக்கப்படுகிறது. இந்த ரயில் பாதையில் கேட் அடைக்கும்போதெல்லாம் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் அனைத்துவகை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும்.
இந்தநிலையில், புதன்கிழமை முற்பகல் அந்த வழியே அடுத்தடுத்து ரயில்கள் சென்ால், சுமாா் அரைமணி நேரத்துக்கு மேலாக ரயில் கேட் அடைக்கப்பட்டிருந்தது. இதனால், புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் அவ்வைவழி, அன்னை சத்யா நகா், தடங்கம், கக்கன்ஜிபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் நீண்டநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பிறகு ரயில்பாதை கேட் திறந்துவுடன் பேருந்துகள் மெல்ல கடந்து சென்றன. இதனால் அந்த வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல, அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்கு சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாகவே சென்றடைந்ததால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாயினா்.