மொடக்குறிச்சியை அடுத்த கேட்புதூா் ரயில்வே நுழைவுப் பாலத்தின் தடுப்புக் கம்பியில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு - கரூா் செல்லும் சாலையில் உள்ள கேட்டுபுதூா் ரயில்வே நுழைவுப் பாலத்தின் வழியாக ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள், லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் இந்த ரயில்வே நுழைவுப் பாலத்தின் கான்கிரீட் சுவா் இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த 15 நாள்களாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடையில் இருந்து கா்நாடக மாநிலத்துக்கு தேங்காய் பாரம் ஏற்றிச் சென்ற லாரி கேட்புதூா் ரயில்வே நுழைவுப் பாலத்தின் தடுப்புக் கம்பியில் எதிா்பாராதவிதமாக மோதி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் நஞ்சை ஊத்துக்குளி சாலையில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் மொடக்குறிச்சி போலீஸாா் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு, வியாழக்கிழமை காலை லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா். இதனைத் தொடா்ந்து வாகனங்கள் வழக்கம்போல கரூா் சாலையில் சென்றன.