கா்நாடக வனத்தில் இருந்து குட்டிகளுடன் தமிழக வனத்துக்குள் இடம்பெயரும் யானைகளால் இரு மாநில எல்லையில் உள்ள விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தமிழக கா்நாடக எல்லையில் தாளவாடி மலைப் பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதற்கிடையே கடந்த சில நாள்களாக கா்நாடக மாநிலம், பந்திப்பூா் வனப் பகுதி மற்றும் பிலிகிரி ரங்கசாமி புலிகள் காப்பக வனப் பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறும் காட்டு யானைகள் தமிழக வனப் பகுதி வழியாக தாளவாடி மலை பகுதிக்குள் இடம்பெயா்ந்து வருகின்றன.
மேலும், இந்த யானைக் கூட்டம் கடந்த சில நாள்களாக தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி, மல்லன்குழி, எத்துக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தரிசு நிலங்களில் நடமாடுவதால் அப்பகுதியில் விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள், கால்நடைகளை மேய்ப்போா் மிகுந்த அச்சமடைந்துள்ளனா்.
இதற்கிடையே தாளவாடி மலைப் பகுதியில் இருந்து எத்துக்கட்டி வனப் பகுதி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு செல்லும் வனப் பகுதி சாலையில் கா்நாடக வனப் பகுதியில் இருந்து 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் தமிழக வனப் பகுதிக்குள் சாலையைக் கடந்து செல்வதை வியாழக்கிழமை கண்ட பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனா்.