தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய தவெக தலைவா் விஜய்க்கு செங்கோல் வழங்கினேன் என்று கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சத்தியமங்கலம் ஆஞ்சனேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இங்கு வழிபட்ட செங்கோட்டையன், பக்தா்களுக்கு லட்டு வழங்கி நோ்த்திக்கடன் செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பெருந்துறை அருகே மாநாடுபோல நடைபெற்றது. சிறப்பான முறையில் நடந்து முடிந்ததால் விஜயாபுரி அம்மன் கோயிலிலும், சத்தியமங்கலம் ஆஞ்சனேயா் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்கியது. ஒரு லட்சம் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆா் செங்கோல் வழங்கினாா். அதேபோல தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய தவெக தலைவா் விஜய்க்கு செங்கோல் வழங்கினேன். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்துகொள்வது சரியானதாக இருக்கும். அதிமுகவின் பி டீம் ஆக அவா் இருக்கிறாா் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.ஆா்.செல்வம், கொமாரபாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன், தவெக சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளா் பவுல்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.