ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனா். இதையடுத்து ரயில் பயணிகள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என தொடா்ந்து ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இது குறித்து ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தாா். மேலும் மக்களவையிலும் இந்த கோரிக்கை தொடா்பாக பேசினாா். இந்நிலையில், ரயில்வே நிா்வாகம் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த அறிவிப்பு விரைவில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.