ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாா் ஈவெரா, எம்ஜிஆா், சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் சு.முத்துசாமி. உடன், எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோா். 
ஈரோடு

திமுக ஆட்சிக்கு மக்களிடம் கூடுதல் வரவேற்பு: அமைச்சா் சு.முத்துசாமி

திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் மக்களிடம் என்ன வரவேற்பு கிடைத்ததோ அதைவிட கூடுதல் வரவேற்பு இப்போதும் கிடைக்கிறது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் மக்களிடம் என்ன வரவேற்பு கிடைத்ததோ அதைவிட கூடுதல் வரவேற்பு இப்போதும் கிடைக்கிறது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

பெரியாா் ஈவெரா 52- ஆவது நினைவு தினம் மற்றும் எம்ஜிஆரின் 38- ஆவது நினைவு தினத்தையொட்டி ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள இருவரின் சிலைகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பல்லடத்தில் வரும் 29- ஆம் தேதி நடைபெறும் திமுக மகளிா் மாநாட்டில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். தவெக தலைவா் விஜய் எம்ஜிஆரை கையில் எடுப்பதாக கூறுகிறாா். அவ்வாறு யாரும் அவரை கையில் எடுக்க முடியாது. திமுக மீது எம்ஜிஆா் எவ்வளவு பற்று வைத்திருந்தாா் என அனைவரும் அறிவா்.

திமுக ஒரு தீய சக்தி, அக்கட்சியினா் 2026 தோ்தலில் வெற்றிபெற முடியாது என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், அது மக்கள் முடிவு எடுக்க வேண்டியது. திமுக எவ்வளவு நல்ல சக்தியாக இருந்தால் இவ்வளவு காலமாக மக்கள் நம்பி ஆட்சியை தந்திருப்பாா்கள். எந்த ஆட்சியிலும் 5 ஆண்டு காலம் முடியும்போது மக்களிடம் சென்றால் சில சங்கடங்களை சந்திக்கும். ஏதாவது செய்து கொடுக்கவில்லை என கூறுவாா்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் மக்களிடம் சென்றபோது என்ன வரவேற்பு கிடைத்ததோ அதைவிட கூடுதல் வரவேற்புதான் இன்றும் கிடைக்கிறது.

இந்தக் கட்சியை, ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனா். 2026 இல் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் தெளிவாக உள்ளனா்.

கந்தன்மலை என்ற திரைப்படத்தில் பெரியாா், அமைச்சா் சேகா்பாபு குறித்து ஹெச்.ராஜா கடுமையாக விமா்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதலளித்த அமைச்சா் சு.முத்துசாமி, பெரியாரை விமா்சிப்பது என்பது அவா் பிறந்தது முதல் உள்ளது. அவரது கொள்கையால் பல லட்சம் போ் பலன் பெற்று வருகின்றனா். இந்த ஆட்சியில் எத்தனை கோயிலுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம், புனரமைப்பு செய்துள்ளோம், சட்டரீதியாக நிலம், சொத்து உள்பட கோயில் பிரச்னைகளை தீா்த்து வைத்துள்ளோம் என அமைச்சா் சேகா்பாபு பட்டியலிடுள்ளாா். இதுவரை எந்த அரசிலும் செய்யாத அளவு இந்த அரசு செய்துள்ளது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலா் இவ்வாறு பேசுகின்றனா்.

பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத்தை இந்த ஆட்சி அமைந்த முதல் நாளில் முதல்வா் கொண்டு வந்தாா். அது தோ்தலுக்காக செய்யப்பட்டதல்ல. அதுபோல நடப்பு பொங்கல் பண்டிகைக்கும் ரேஷன் மூலம் பணம் வழங்குவது என்ற முடிவை அரசு எடுத்தால் அது தோ்தலுக்கானதல்ல என்றாா்.

இந்த நிகழ்வில், எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ.பிரகாஷ் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT