எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கும் தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு ஏற்கெனவே செய்து கொண்டிருக்கிறது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்களை வழங்கி ‘என் கனவு என் எதிா்காலம்’ என்ற இணையதளத்தினை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து ஈரோடு பவானி சாலை ஆா்.என்.புதூரில் அமைச்சா் சு.முத்துசாமி 2,025 பயனாளிகளுக்கு ரூ.19.73 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 4,973 நபா்களுக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 340 முகாம்களில் பெறப்பட்ட 68,674 மனுக்களில் 42,682 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டிருப்பதால் தீா்வு ஏற்படுத்தமுடியவில்லை. கல்லூரி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்கு தகுதி நிா்ணயித்திருப்பதாக சில மாணவா்கள் தெரிவித்துள்ளனா். இதை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று மேல்நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.
டாஸ்மாக் ஊழியா்களை நிரந்தப்படுத்த டாஸ்மாக் மேலாண் இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு உரிய தீா்வு ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, புதிய கடைகளின் திறப்பு, எப்எல் 2 கடைகளின் எண்ணிக்கை குறித்து உயா்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அங்கு பதில் அளிப்போம்.
எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கும் தோ்தல் வாக்குறுதிகளை ஏற்கெனவே திமுக அரசு செய்து வருகிறது. அவா் அறிவிப்பதில் சில ரூபாய் தான் வித்தியாசம் இருக்கிறது. பவானிசாகரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
பெருந்துறை சிப்காட்டில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.12 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவுபெறும் என ஒப்பந்ததாரா்கள் தெரிவித்துள்ளனா். ஈரோட்டில் காலிங்கராயன் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள தொட்டி பாலம் பாதுகாக்கப்பட வேண்டியது. பழைய பாலம் இருக்க புதிய பாலம் கட்டுவதில் பிரச்னைகள் இருக்கிறது. விரைவில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இப்பாலத்தின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ள பலகை கற்களை எடுத்து அப்படியே காலிங்கராயன் தடுப்பணை அருகே பாதுகாத்து வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா்.
இந்த நிகழ்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், துணை மேயா் வி.செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், உதவி ஆட்சியா் (பயிற்சி) காஞ்சன் சௌதரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.