தமிழகம் தலைநிமிரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வாக்காளா்கள் ஆதரிக்க வேண்டும் என பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கேட்டுக் கொண்டாா்.
பாஜக சாா்பில் அந்தியூரை அடுத்த பிரம்மதேசம், செம்புளிச்சாம்பாளையத்தில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தியூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில்குமாா், அந்தியூா் தொகுதி பொறுப்பாளா் கே.வி.ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள 12,500 கிராமங்களிலும் தீா்க்கப்படாத பல்வேறு பிரச்னைகள் உள்ளன. தமிழகம் தலைகுனியக் கூடாது என்பதற்காகவே ‘தமிழகம் தலைநிமிர தமிழரின் பயணம்’ எனும் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்காளா்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் நிலவும் நெசவாளா்கள் பிரச்னைகளைத் தீா்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பா்கூா் மலைவாழ் மக்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள ஜாதி சான்றிதழை வழங்கவும், பிரம்மதேசம் ஊராட்சியை இரண்டாக பிரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், மேட்டூா் வலது கரை வாய்க்கால் திட்டம், அந்தியூா் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு, துப்புரவு தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் மாத ஊதியம் வழங்க உத்தரவாதம் அளிக்கப்படும். 60 வயது நிறைவான விவசாயிகளுக்கு மத்திய அரசு அளிக்கும் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
விவசாய அணி மாவட்டச் செயலாளா் எம்.குருநாதன், அந்தியூா் வடக்கு ஒன்றியத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.