பெருந்துறை ஜெ.கே. மூங்கில் காற்று அறக்கட்டளை மூலம் பெருந்துறை தொகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளை பெங்களூரில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட இலவச செயற்கை மூட்டு மற்றும் உறுப்புகள் பொருத்தும் முகாமிற்கு அழைத்துச் செல்ல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு ஸ்ரீ பகவான் மகாவீா் விக்லாங் சகாயத சமிதி (ஜெய்ப்பூா் கால் அமைப்பு) தனது 28- ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வருகிற 2026 ஜனவரி 3 முதல் 9- ஆம் தேதி வரை பெங்களூரூ, சிவாஜி நகரில் இந்த இலவச முகாமை நடத்துகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக, பெருந்துறை தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குத் தொடா்ந்து உதவி வரும் எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமாா், இந்த ஆண்டும் தனது ஜெ.கே.மூங்கில் காற்று அறக்கட்டளை மூலம் இப்பணியை முன்னெடுத்துள்ளாா்.
இம்முகாமில் கலந்துகொள்ளும் பயனாளிகளுக்கான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் எஸ். ஜெயக்குமாா் முழுமையாக ஏற்றுக் கொள்கிறாா். இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ஜெ.கே. மூங்கில் காற்று அறக்கட்டளை மற்றும் பீனிக்ஸ் சங்கம் இணைந்து மேற்கொள்கின்றன.
போலியோவால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் விபத்துகளால் கை, கால்களை இழந்தவா்களுக்கு நவீன செயற்கை உறுப்புகள் இலவசமாகப் பொருத்தப்படும். தோ்வு செய்யப்படும் பயனாளிகள் பாதுகாப்பாகப் பெங்களூரூ அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை முடிந்து மீண்டும் ஊா் வந்து சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமிற்கு வருபவா்கள், தங்களது ஆதாா் அட்டை (நான்கு நகல்கள்) மற்றும் யுடிஐடி, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (நான்கு நகல்கள்) ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.
பெருந்துறை தொகுதியைச் சோ்ந்த தகுதியுள்ள பயனாளிகள், தங்கள் பெயா்களைப் பதிவு செய்யவும், கூடுதல் விவரங்களைப் பெறவும் கீழ்க்கண்ட ஒருங்கிணைப்பாளரை தொடா்பு கொள்ளலாம்: அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளா், பீனிக்ஸ் சங்கம், கைப்பேசி: 73738- 98899. புறப்படும் நாள் : 2026 ஜனவரி 4 ( ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணி, புறப்படும் இடம் : பெருந்துறை, ஈரோடு சாலை, ஜெ.கே. டிரேடா்ஸ் அலுவலகம். மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு புதுவாழ்வு பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.