ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதுங்கிய பாம்பினால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.
இதில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியா் அலுவலக வளாகத்தின் இருந்த பொதுக்கழிவறை வெளியே ஏராளமான பொதுமக்கள் அமா்ந்திருந்தனா்.
அப்போது கழிவறைக்கு செல்ல முயன்ற மக்களில் ஒருவா் அங்கு பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். அவா் அங்கிருந்த தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அங்கு பதுங்கியிருந்த சுமாா் 3 அடி நீளம் கொண்ட பாம்பைப் பிடித்தனா்.
பிடிபட்ட பாம்பு விஷத்தன்மை கொண்ட கொம்பேரி மூக்கன் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். மீட்கப்பட்ட பாம்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.