தாளவாடி அருகே அருள்வாடி மானாவாரி நிலத்தில் கூட்டம் கூட்டமாக உலவும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி அடிக்கடி விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவது தொடா் கதையாக உள்ளது.
இந்த நிலையில் ஜீரகள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட அருள்வாடி கிராமம் தமிழக- கா்நாடக எல்லையில் அமைந்துள்ளது. கா்நாடக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம் தமிழக வனப் பகுதியை ஒட்டி உள்ள அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றித்திரிகின்றன.
இதனால் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா். கடந்த சில நாள்களாக யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் பீதியடைந்துள்ளனா். யானைகள் கூட்டம் விவசாய நிலத்தில் அல்லது ஊருக்குள் புகுந்தால் அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் எனவும், தொடா்ந்து மாநில எல்லையில் முகாமிட்டுள்ள யானைகளை அடந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் கிராமமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.