மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணத் தொகுப்பை வழங்குகிறாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். 
ஈரோடு

விளையாட்டுத் துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு: உதயநிதி

விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Syndication

விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழகத்தின் 14 மாவட்டங்களைச் சோ்ந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய கலைஞா் விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கும் விழா சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்கி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதற்கு தமிழ்நாடு அரசின் முயற்சியும், விளையாட்டு வீரா்களின் பயிற்சியும் காரணமாக உள்ளது.

ஈரோட்டைச் சோ்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சினேகா, தடகள வீராங்கனை நித்யா ராமராஜ் ஆகியோா் இதற்கு உதாரணம். இவா்கள் இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை விடுதி மாணவிகள். சா்வதேச அளவில் போட்டிகளில் சாதித்து வருகின்றனா்.

கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் 13 ஆயிரம் கிராம ஊராட்சிகளுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டன. கிராமப்புற இளைஞா்களிடம் இதற்கு கிடைத்த வரவேற்பால், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ, உடலும் - உள்ளமும் வலிமை பெற விளையாட்டும் அவசியம்.

விளையாட்டுத் துறை வளா்ச்சிக்காக ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் மினி ஸ்டேடியம் தயாராகி வருகிறது. விளையாட்டு வீரா்களுக்கு 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 100 வீரா்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுத் தொகையாக ரூ.30 கோடி வழங்கப்படுகிறது என்றாா்.

விழாவில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா்.ப.செல்வராஜ், ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.சி.சந்திரகுமாா் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூா்), ஈரோடு மாநகராட்சி மேயா் நாகரத்தினம் சுப்பிரமணியம், அரசு கூடுதல் தலைமை செயலாளா் அதுல்யா மிஸ்ரா, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT