ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2024 ஜனவரி முதல் இதுவரை 12,500 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாநகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை மாநகராட்சிப் பணியாளா்கள் பிடித்து சென்று சோலாரில் உள்ள கருத்தடை மையத்தில் கருத்தடை செய்து வெறிநாய் தடுப்பூசி செலுத்தி பராமரித்து வருகின்றனா். பின்னா் பிடிபட்ட இடத்திலேயே அவைகளை பத்திரமாக விட்டுவிக்கப்படுகின்றன.
இருப்பினும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்குநாள் தெருநாய்களின் எண்ணிக்கையும், தொல்லையும் அதிகரித்து வருகின்றன. நாய்கள் தெருக்கள் மற்றும் சாலையின் மையப்பகுதியில் படுத்து கொள்வதால் இருசக்கர வாகனம், காா்களில் செல்வோா் விபத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை நாய்கள் விரட்டி சென்று கடித்து வருகின்றன.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வில்லரசம்பட்டி, கனிராவுத்தா் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கடித்து குதறியதில் கடந்த ஓராண்டில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள், ஒரு பசுங்கன்று உயிரிழந்துள்ளன. மேலும் கடந்த சில மாதங்களில் 50-க்கும் மேற்பட்டோா் நாய் கடியால் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.
இதையடுத்து, கடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்கவும், தொல்லையைக் கட்டுப்படுத்தவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
அதனடிப்படையில் மாநகராட்சியில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில், தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கருத்தடை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகர நல அலுவலா் காா்த்திகேயன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் கடந்த 2024 ஜனவரி முதல் இதுவரை 12,500 தெருநாய்கள் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை சிகிச்சை செய்து, வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பின்னா் அந்த நாய்கள் பிடிப்பட்ட இடத்திலேயே விடப்பட்டுள்ளன. தற்போது, தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில், கருத்தடை செய்யும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தெருநாய்களை பிடிப்பதற்காக கூடுதல் வாகனங்கள் ஒதுக்குவதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை வெகு விரைவில் கட்டுப்படுத்தி அனைத்து விதமான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.