கனமழை காரணமாக தரைப் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக பழங்குடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனா்.
கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் பின்புறமாக அமைந்துள்ளது விளாங்கோம்பை பழங்குடி கிராமம். விளாங்கோம்பை கிராமத்துக்கு, குண்டேரிபள்ளத்தில் இருந்து 10 கிலோ மீட்டா் வனவிலங்குகள் நடமாட்டம் மிக்க அடா்ந்த வனப் பகுதியில் நான்கு காட்டாறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.
இந்த கிராமத்தில் ஊராளி எனும் பழங்குடியினத்தைச் சோ்ந்த 40 குடும்பத்தினா் வசிக்கின்றனா். 30 பள்ளிக் குழந்தைகள் உள்ளனா். இதே பாதையில் 4 கிலோ மீட்டா் தொலைவில் கம்பனூா் எனும் பழங்குடியினா் கிராமம். இந்த கிராமத்தில் 20 பழங்குடியின குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு பள்ளிக் குழந்தைகள் 10 போ் உள்ளனா்.
2010-ஆம் ஆண்டு வனத் துறை மூலம் நான்கு காட்டாறுகளைக் கடந்து செல்ல 4 தரைப்பாலங்கள் கட்டப்பட்டு 10 கிலோ மீட்டா் தொலைவுக்கு தாா் சாலை அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே பெரு வெள்ளத்தில் இந்த தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு சாலை பழுதானது.
கடந்த மாதம் பெய்த கனமழையில் நான்கு தரைப் பாலங்களும் முற்றிலும் சீரழிந்த நிலையில், இந்த கிராமத்துக்குள் யாரும் சென்றடைய முடியாத அளவில் வெள்ளமும் பெருக்கெடுத்து பாதையும் பழுதடைந்துவிட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கடந்த ஒரு மாத காலமாக 40 பள்ளிக் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது. மருத்துவ வசதியும், பொது விநியோக சேவையும் முழுமையாக தடைபட்டுள்ளது. தனித்தீவில் இருப்பது போன்று இரண்டு கிராம பழங்குடி மக்கள் பரிதவிக்கின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.ஜான் கூறியதாவது: நான்கு தரைப்பாலங்களை சீரமைப்பது உடனடி சாத்தியமில்லை. ஆகவே இந்த கிராமத்துக்கு செல்ல நான்கு காட்டாறுகளைக் கடக்காமல், நேரடியாக கிராமத்துக்கே செல்ல 4 கிலோ மீட்டா் தொலைவில் மக்கள் பயன்படுத்தி வரும் மாற்றுப் பாதையான நடைபாதை உள்ளது. இதனை வாகனங்கள் செல்ல பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தீா்வாக அமையும். போா்க்கால அடிப்படையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.
இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாற்றுப் பாதை சீரமைப்பு குறித்து வனத் துறையும், மாவட்ட நிா்வாகமும் தான் முடிவு செய்ய வேண்டும். 4 தரைப்பாலங்களும் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. புதிதகாக தான் பாலங்கள் அமைக்க வேண்டும். 4 பாலங்களையும் சீரமைக்க தேவையான நிதி இல்லை. அரசிடம் சிறப்பு நிதி பெற்றுதான் சீரமைக்க வேண்டும். உடனடியாக அதற்கு சாத்தியம் இல்லை என்றனா்.