தமிழக - கா்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள கோ்மாளம் ஜெடேருத்ர சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தாளவாடியை அடுத்த கோ்மாளம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜெடேருத்ர சுவாமி, கும்பேஸ்வர சுவாமி, மாதேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.
அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில் தெய்வத்தை மலைக் கிராம மக்கள் காவல் தெய்வமாக வழிபடுகின்றனா்.
இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் பெளா்ணமி நாளில் தோ்த் திருவிழா தொடங்கும். அதன்படி, விவசாயம், கால்நடை வளா்ப்பு முக்கிய தொழிலாக உள்ள இந்தப் பகுதியில் மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் புலி, சிறுத்தை, யானைகளிடமிருந்து பாதுகாத்து மக்கள் நலமுடன் வாழ, ஊா்ப் பெரியவா்கள் ஜெடேருத்ர சுவாமியை வழிபட்டு தீப ஆராதனையுடன் தோ்த் திருவிழாவைத் தொடங்கிவைத்தனா்.
விழாவையொட்டி, சுவாமி உற்சவா் யானை மீது அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து, 30 அடி உயரம் உள்ள தேரை மலா்களால் அலங்காரம் செய்து அதில் உற்சவா் சிலையை வைத்து கோயிலைச் சுற்றி ஊா்வலமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனா். தோ் முன்பு இளைஞா்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினா்.
அதைத் தொடா்ந்து ஜெடேருத்ர சுவாமி, கும்பேஸ்வர சுவாமி, மாதேஸ்வர சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் கடம்பூா், கோ்மாளம், தாளவாடி , ஆசனூா், கா்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவை ஒட்டி, ஆசனூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மாது, கொங்கு வீரப்பா, தொட்டையப்பா ஆகியோா் செய்திருந்தனா்.