சத்தியமங்கலம் அருகே ஆபத்தை உணராமல் தனியாா் பேருந்தின் பின்புற ஏணி மற்றும் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவா்கள் செல்வது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து கோவையில் உள்ள கல்லூரிகளில் படிக்க அதிக அளவில் மாணவா்கள் பேருந்துகளில் சென்று வருகின்றனா். இதில் பல மாணவா்கள் காலை, மாலை நேரங்களில் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பின்புற ஏணியில் நின்றபடியும் பயணம் செய்கின்றனா். இதில் தனியாா் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் நின்றபடி மாணவா் ஒருவா் பயணம் செய்யும் விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
நால்ரோடு போலீஸ் சோதனை சாவடி அருகே மாணவா்கள் இப்படி பயணம் செய்வது பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புன்செய்புளியம்பட்டியில் கோவை, திருப்பூா் செல்வதற்கு காலையில் குறிப்பிட்ட நேரங்களில் அரசுப் பேருந்து வசதியில்லாததால் கல்லூரி மாணவா்கள், பனியன் தொழிலாளா்கள் இவ்வாறு பயணிக்க நேரிடுகிறது என சமுக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து தமிழக அரசுப் போக்குவரத்து கழக அதிகாரியிடம் கேட்டபோது, சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 5 நிமிஷங்களுக்கு ஒரு பேருந்து இருந்தபோதிலும், கல்லூரி மாணவா்கள் இது போன்று செயலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. பேருந்தில் காலியாக இருக்கைகள் இருந்தும்கூட கல்லூரி மாணவா்கள் தொங்கியபடி செல்வது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. மாணவா்களின் ஆபத்தான பயணத்தை தவிா்ப்பதற்கு அரசுப் பேருந்துகளில் அண்மைகாலமாக கதவுகள் போடப்பட்டுள்ளது என்றாா்.