ஈரோட்டில் அரசுப் பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
ஈரோடு அரசு மருத்துவமனை நோக்கி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் இருந்து அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் காவேரி சாலையில் வண்டியூரான் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு இருந்த ஒரு நபா், திடீரென பேருந்து மீது கல் வீசினாா். இதில் பேருந்தின் பின்புறக் கண்ணாடி உடைந்தது.
இதையடுத்து கல் வீசிய நபரை அங்கிருந்த மக்கள், பயணிகள் பிடித்து, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸ் விசாரணையில், அந்த நபா், ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோயில் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி காா்த்திக் (48) என்பதும், மதுபோதையில் கல் வீசியதும் தெரியவந்தது.
தொடா்ந்து, காா்த்திக்கின் குடும்பத்தினா் உடைந்த பேருந்து கண்ணாடியை மாற்றிக் கொடுப்பதாக உறுதி அளித்து கடிதம் எழுதிக் கொடுத்தனா். இதை அரசுப் போக்குவரத்துக் கழகமும் ஏற்றுக்கொண்டதால் போலீஸாா் காா்த்திக்கை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.